நவம்பர் 6, 2011 தேதியிட்ட The Hindu நாளேட்டின் சென்னைப் பதிப்பில் ஏவுகணை விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம், ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்துக்கு அணுசக்தியின் அவசியம் குறித்து Nuclear power is our gateway to a prosperous future என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தார் (பக்கம் 14, 15). அதன் தமிழ் மொழியாக்கம் இது. கட்டுரையின்ஆங்கில மூலம் இங்கே உள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் : சி. சரவணகார்த்திகேயன்
அணுசக்தியே வளமான எதிர்காலத்துக்கான நமது நுழைவாயில்
• ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் & ஸ்ரீஜன் பால் சிங் •
0
விஷயத்தைப் புரிந்து கொள்ள மரபான எரிபொருள் – சுமார் 10,000 டன் நிலக்கரி – சுமந்த 50 சரக்குப் பெட்டிகளைக் கொண்ட ஒரு கிலோ மீட்டர் நீள ரயிலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய காரின் டிக்கியில் அடைத்துவிட முடிகிற 500 கிலோ (i) டைப்-1 எரிபொருளால் – இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் – அதே அளவு ஆற்றலை உற்பத்தி செய்யமுடியும். தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் போது இயற்கையில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். சில மதிப்பீடுகளின் படி (ii), இந்த வகையில் இன்னும் குறைவான அளவே தேவைப்படும் – ஒரு சிறிய பையில் (iii) வைத்துவிடக்கூடிய 62.5 கிலோ அல்லது அதற்கும் குறைந்த அளவு. (குறிப்பு: 500 கிலோ இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 3.5 கிலோ யுரேனியம்-235 எரிபொருள் இருக்கும்.)
ஆற்றலும் பொருளாதாரமும்
அணு ஆற்றலின் சர்வதேச நிலைமையை ஆராய்தல்
அதீத இயற்கைச்சீற்றங்களால் ஜப்பானில் 40 வயது ஃபுகுஷிமா அணு உலையில் நடந்த ஒரு விபத்து, பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு ஆவதற்கான நம் கனவுகளை தடம் புரளச் செய்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? சில ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, அணுசக்தியை படிப்படியாக நிறுத்த முடிவு செய்திருப்பது நமது அணுசக்தித் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை நம்மை எடுக்க வைக்கும் மேலோட்டமான விவாதப்பொருளாகிவிடக்கூடாது.
தொடர்புடைய சில விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும். ஜெர்மனியின் முடிவு அதன் தற்போதைய நிலைமைக்குப் பொருந்துகிறது – அணுசக்தி தொடர்பாக முன்வைக்கப்படும் அபாயங்களின் வெற்று கரிசனங்களைத் தாண்டியது அது. ஜெர்மனி ஒரு முன்னேறிய நாடு, மின்சக்தி உபரியாக வைத்திருக்கும் நாடு. அதனால் சில அணு உலைகளை இழப்பதில் அதற்குப் பிரச்னையில்லை. அதை விட முக்கியமாக, ஜெர்மனி தன் அணு க்கனிம வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி முடித்து விட்டது. யுரேனியம் மொத்தத் தேவை 3,332 டன்களில் (2006 – 2008) (vii) எனும் போது அதனால் உற்பத்தி செய்ய முடிந்தது 68 டன்கள் மட்டுமே (குறிப்பு : இது 2006ம் ஆண்டின் உற்பத்தி). பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருக்கிறது (viii). ஆக, ஆற்றல் சுதந்தரம் என்ற அதன் குறிக்கோளுக்கு அணு ஆற்றல் பொருந்தாது. இதற்கு நேர்மாறாக இந்தியா தோரியம் எனப்படும் புதிய அணு எரிபொருள் வளத்தில் முதன்மையில் இருக்கிறது – இது நாளைய அணு எரிபொருளாகக் கருதப்படுகிறது.
சில மேற்கத்திய நாடுகள் தம் அணுத்திட்டங்களை நிறுத்துவதாக அல்லது ஜப்பான் தன் அணு உலை விஸ்தரிப்பை மறுபரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படும் போது இந்திய மக்கள் தவறாக செலுத்தப்படுகிறார்கள். தொடர்புடைய அட்டவணையைக் கவனியுங்கள். முன்னேறிய நாடுகள் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் பங்கு என்ன என்பதைக் காட்டுகிறது இது.
பெரும்பாலான செல்வச்செழிப்பு மிக்க நாடுகள் 30 – 40 சதவிகித மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து பெறுகின்றன என்பதையும் பருவநிலை மாற்றங்கள் பாதிப்புக்குள்ளாதல், சூழல் மாசு ஏற்படுத்தும் சுகாதாரக் கேடுகள் ஆகிய சுமையைக் குறைத்து, சுத்த சக்தி திட்டத்தில் அது குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த ஆய்வு தெளிவாக்குகிறது. அதே சமயம் இந்தியா தன் மொத்த 150 ஜிகாவாட் மின் உற்பத்தியில் 5000 மெகாவாட் கூட அணுசக்தி மூலம் உற்பத்தி செய்வதில்லை. பெரும்பாலானது நிலக்கரியிலிருந்தே வருகிறது.
அணுசக்தியின் அதிகபட்ச பலன்களை அனுபவித்து வரும் நாடுகள் அவ்வப்போது பரப்பும் அணுசக்திக்கு எதிரான செய்திகளில் அடித்துச் செல்லப்படாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தம் வெற்றிகளைத் திரித்து, நியோ யுக செயலுரிமை அதிகார பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு சவாலாக அமையக்கூடிய இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளை தவறாக வழி நடத்துவது பொருளாதாரத்தில் முன்னேறிய உலகுக்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பழக்கம். இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை இந்தியர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
நிலக்கரி வயல்களும் எரியும் பூமியும்ஜார்கண்டிலிருக்கும் ஜாரியா, நிலக்கரி வயல் நாட்டின் மிக வளமான நிலக்கரிப் பிரதேசமாகத் திகழ்கிறது. அங்கு அதிக அளவில் உயர் ரக சுட்ட நிலக்கரி இருக்கிறது. ஆனால் உள்ளூர் பழங்குடி கிராமத்தவர்களுக்கு இந்த இயற்கை வளம் அங்கே இருப்பது ஒரு சாபம். பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளைவித்த விபத்துகளின் நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட ஜாரியா பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுரங்கத் தீ விபத்துக்கள் இன்னமும் தொடர்கின்றன.நான் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் சிந்திரியிலிருந்து தன்பாத் சென்று கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான கிராம மக்கள் என் காரை நோக்கி விரைந்து வந்தார்கள். நாங்கள் உடனே நிறுத்தி அவர்களை விசாரித்தோம். அவர்கள் வீடுகளுக்கு அருகில் தீப்பிடித்தல், அதிகச் சூடாகுதல் போன்ற நிகழ்வுகள் வழக்கமாகிவிட்டதை விவரித்தார்கள். சுரங்கத்துறையினருக்கு இருக்கும் பெரும் சவால் மக்கள் தொகையும் மக்கள் அடர்த்தியும் மிகுந்த நிலக்கரிப் பிரதேசங்களில் தீ விபத்துக்களைக் கையாள்வதுதான். நானும் என் குழுவும் அவர்கள் வீடுகளைச் சென்று பார்த்தோம். அங்கே வானத்திலிருந்து அல்லாமல் கீழே நிலத்திலிருந்து அதிகபட்சமான, தாங்கவொண்ணா வெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. சிலசமயம் நெருப்பு ஜ்வாலைகள் நிலத்திலிருந்து வெளிப்பட்டு பூமியைக் கருப்பாக்கும்.மொத்தப் பகுதியே சுரங்க வேலைகளால் அழிக்கப்பட்டு, மனிதர்களோ பிற உயிர்களோ வாழத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டிருந்தது. துக்ககரமாக, அதைப் பழைய நிலைமைக்கு மாற்றவே முடியாது. குறைந்தபட்சம் அடுத்து சில லட்சம் வருடங்களுக்கேனும். இன்று உலகம் முழுக்க எடுக்கப்படும் நிலக்கரியில் பெரும்பான்மை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பூமியெங்கும் கிராமங்களிலும் காடுகளிலும் பல ஜாரியாக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் தொல்லுயிரெச்ச எரிபொருட்களுக்கு நீடித்ததொரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும்வரை இவை எண்ணிக்கையிலும் அளவினிலும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.
இயற்கைக்கு உகந்த ஆற்றல் வழிகள் நிச்சயம் சூரிய சக்தியும் காற்றாலைகளும்தாம். ஏராள சூரிய ஒளி, காற்று வேகம் அதிகமாக இருக்கும் இடங்கள் என இந்த வகை ஆற்றலுக்கான வாய்ப்பு நிச்சயம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் சூரிய சக்தியும் காற்றாலைகளும் அவற்றின் அத்தனை அனுகூலங்களையும் தாண்டி வானிலையையும் சூரிய ஒளியையும் ஆதீதமாகச் சார்ந்து இருப்பதால் நிலையற்றவை. இதற்கு நேர்மாறாக அணு சக்தி சர்வதேசிய இருப்புடன், ஒப்பீட்டளவில் சுத்தமான, அதிக அடர்த்தியான, நம்பகத்தன்மையான ஆற்றல் மூலமாக விளங்குகிறது. இன்று 29 நாடுகள் 441 அணு உலைகளை இயக்கி 495 ஜிகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. மொத்தமாக இத்துறையில் 14,000 வருட உலை அனுபவம் இருக்கிறது. 58.6 ஜிகாவாட் உற்பத்தித் திறனில் அறுபது புதிய அணு உலைகள் கட்டுமானத்தில் இருக்கின்றன (குறிப்பு: 2010ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில்).
அணு உலை விபத்துகளின் அழிவு சக்தி, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கத் துருப்புகள் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளின் விளைவுகளோடு ஒப்பிடப்படுகிறது. அணு அபாயங்கள், விபரீதங்கள் குறித்த நமது கருத்துகளைக் கட்டமைக்க நகரங்கள் மீது பரவிய வெண்குடை மேகங்கள், தீய்ந்து போன கட்டடங்கள் போன்ற கொடுமையான மரணக் காட்சிகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் இது உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அணுகுண்டை அணு உலையோடு ஒப்பிடுவது மோசமான முடிவு. திட்டமிட்டு பீதியைப் பரப்பும் செயல். அணுகுண்டு என்பது குறைந்த நேரத்தில் அதிக ஆற்றலை வெளியிடுவதன் மூலம் வெடிப்புகளும், நெருப்பும் உருவாகி, பிரம்மாண்ட வெப்பம் உற்பத்தி ஆகிறது. அதன் வழியில் எதிர்ப்படும் எல்லாப் பொருட்களையும் உருத்தெரியாமல் சிதைப்பதற்கென்றே அது வடிவமைக்கப்பட்டது. ஒரு குண்டு இப்படிச் செய்யவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படும்.
இதற்கு நேர்மாறாக, அணு உலைகள் போன்ற ராணுவம் சாரா அணு பயன்பாடுகள், குறைந்த ஆற்றலை பெரும் காலச்சட்டகத்தில் நிலைத்து நின்று வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டவை. அணுக்கரு விளைவுகளைக் கட்டுப்படுத்தும், குளிரச்செய்யும் அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டவை . பாதுகாப்பு முறைமைகள், காப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கின்றன. 2011 போலான ஒரு விபரீதத்தின் போதும் கூட ஏற்படும் அழிவு அணுகுண்டால் ஏற்படுவதில் ஒரு பின்னம் கூட இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக