எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, அம்மாவின் சேலைத் தலைப்பிலேயே வளர்ந்து, அவள் நிழலில் படித்து ஆளாகி, பிழைப்புக்காக எங்கோ நாடு கடத்தப்பட்ட மக்களில் நானும் ஒருவன். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்டவரானால் இங்கே நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் மனசாட்சியையும் உங்களிடம் பேச வைக்கும்.
அம்மாக்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு எல்லாமுமாக இருப்பவள், நாம் என்ன தவறு செய்தாலும் பொறுப்பேற்பவள் என. எனினும் உலகத்தில் சில விஷயங்களை இது இப்படித்தான் என வரையறுத்திட முடியாது. அதில் முதலானது அம்மா எனும் உயிர். இப்படி உயிரான அம்மாவைப் பிரிந்து, எங்கோ சென்று பிழைக்கும் வாழ்க்கை தான் வாய்க்கிறது நமக்குள் பலருக்கும். இப்படிப் உயிர் கொடுத்தவளைப் பிரிந்து, எங்கோ நவ நாகரிக உலகில், அள்ள அள்ள கை நிறையப் பணம், வாழ்க்கையில் இதுவரை கண்டிடாத இன்பங்கள் என போலி போதைக்கு அடிமையாகி, நம் சுயத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்காக அங்கு ஒரு ஜீவன் துடித்துக் கொண்டிருக்கிறதே என்பதையும் மறந்து. இங்கே நாம் பிஸ்ஸா, பர்கர் என மேய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், “சாப்பிடுற நேரமாச்சே, புள்ள சாப்பிட்டானோ இல்லையோ” என ஏங்கித் தவித்து கால்வயிற்றுக் கஞ்சியும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் குடித்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பவள்தான் அம்மா. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது பல ஆயிரங்களை அவள் கையில் கொடுத்து வந்திருந்தாலும், ஒருமுறையேனும் ஒரு ஆயிரமாவது தபாலில்/மணி ஆர்டரில் அனுப்பிப் பாருங்கள், பிறகு தெரியும் அவள் மகிழ்ச்சி என்னவென்று. “என் புள்ள காசு அனுப்பிருக்கான்” என்று ஊரெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுவாள் அவள் மகிழ்ச்சியை. எல்லா அம்மாக்களும் எதிர் பார்ப்பது இதைதான்.
இப்படி வாழ்க்கைச் சுழலில் கிராமத்தை விட்டு, அம்மாவை பிரிந்து தொழிலுக்காக எங்கோ போய் நடுத்தெருவில் நின்று கொண்டிருப்போம். என்ன கொஞ்சம் கவுரவம் மட்டும் சேர்ந்திருக்கும். கை நிறையப் பணம், கார் என ஆடம்பரம் எல்லாமுமே. எனினும் இவை அனைத்தும் நம் அம்மா கையிட்டு பிசைந்து தரும் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகாது. வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு கால கட்டத்தில் மீண்டும் அம்மா நினைவு வரும். உடம்புக்கு ஏதாவது வந்தாலோ, நம் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆனாலோ அப்போது அம்மா தேவைப் படுவாள்.
இன்னும் கொஞ்சம் வயதாகிப் போனால், அம்மாவின் நினைப்பு இன்னும் அதிகமாகும். பிரிவின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க உறவின் ஆழமும் கூடுமே, அதுதானே நியதி. நம் அம்மா அணிந்திருப்பதைப் போல யாரேனும் உடையணிந்திருப்பதைக் கண்டாலோ, அவள் வயதொத்த, அவள் சாயல் கொண்ட பெண்களைக் கண்டாலோ ஒரு நிமிடம் மனசாட்சி கரையத்துவங்கும். வாழ்க்கையில் எதையோ இழந்து விட்ட தவிப்பு, இனம்புரியா அழுகை மனதில் பரவத் துவங்கும். அப்போது மனசாட்சி நிச்சயம் நம்முடன் பேசும், அம்மாவைப் பற்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக